
பெரும் பான்மையான தமிழ் வலைப்பூக்களை வாசித்து வருபவன் என்கிற ரீதியில் இந்த தமிழ் வலைப் பூக்களின் அண்மைய செல் பாதை எங்கே எம்மை இட்டுச் செல்கிறது என்பது பற்றிய எனது அபிபிராயங்களை எழுதலாம் என்று படுகிறது.
வலைப்பூக்கள் எமது சமூகத்தில் நிலவும் பல்வேறு வகையானவர்களின் கருத்துக்களை ,அனுபவங்களை வெளிக்காட்டும் ஒரு காலக்கண்ணாடி போலவே தொழிற் படுவதாக எனக்குப்படுகிறது.இங்கே அவர் அவர் வாழும் சூழல், அவர்களின் பொருளாதார, சமூக நிலமைகள், அவர்களின் வாழ்வியல் அனுபவங்கள் இவற்றின் அடிப்படையிலையே இவை எழுதப்படுகின்றன.இவ்வாறு சொந்த அனுபவங்களாக கருதுக்களாக பிறக்கும் ஒவ்வொரு படைப்பும், பலரின் பார்வைக்கும் ,விமரிசனத்துக்கும் வைக்கப்படும் இடத்தில், சமூகத்தில் ஏற்கனவே இருக்கும் முரண்களின் அடைப்படையில் வர்க்கமாகவும்,சாதிய அணிகளாகவும்,சமயச் சார்புடையனவாகவும்,வகைப் படுத்தப்பட்டு ஒரு பகைப் புலத்தின் அடிப்படையில் பின்னூட்ட, பதிற் பதிவுகளும், குடுமி பிடி சண்டைகளாகவும் உரு மாறுகின்றன.
இவ்வாறான நிலமை ஆரோக்கியமான ஒன்றா என்று எவரும் நிலையாக நின்று சிந்திப்பதாகத் தெரியவில்லை. நாம் இங்கு தொடர்பாடல் பற்றிய ஒரு சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ளல் அவசியம் என்று எனக்குப் படுகிறது.மனித நாகரிகம் வளர்ந்தது மனிதன் பகுதறிவாகச் சிந்தித்துச் செயற்பட்டதால்.மிருகங்களைப் போல் கூடி நின்று கும்மி அடிப்பதால் வரும் பயன் தான் என்ன?ஒரு கருத்துக்கு புதிய வியாக்கியானம் அல்லது ,ஒரு புதிய பார்வையைச் செலுத்துவது தான் கருத்துக்களின் வளத்தை விரிவு படுத்தும். நான் நினைதது தான் சரி என்று ஒற்றைக்காலில் நின்று வாதிடுவதால் வரும் பயன் தான் என்ன? இலவசமாகக் கிடைக்கிறது என்று எமது அரிய நேரத்தை மற்றவர்களைத் தூற்றுவதில் செலுத்துவதால் கிடைக்கும் பயன் தான் என்ன?ஒரு வாசகன் என்கிற ரீதியில் அண்மையில் தமிழ் மணத்தில் நிகழ்ந்த குத்து வெட்டுக்கள் வலைப்பூக்கள் மீதி இருந்த ஆர்வத்தைக் குறைத்து விட்டது.இவற்றில் இருந்து இனி வேறெதை எதிர் பார்க்க முடியும் என்றாகி விட்டது.இந்த சகதிக்குள் ஆங்காங்கே கிடக்கும் நல்ல பதிவுகளும் அடி பட்டுப்போய் விடுகிறது.இதற்கு தொழில் நுட்ப ரீதியாக எதாவது தீர்வுகளிருக்கின்றனவா? தமிழ் மணத்தில் வரும் தேர்வுகளும் அதே குழுவாததினால் சிதறடிக்கப் படுவதாகப்படுகிறது.
இதற்குத் தீர்வுகள் எதாவது இருகின்றனவா?